உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காதலை நிராகரித்த இளைஞரின் மர்ம உறுப்பை வெட்டி தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரயாக்ராஜில் வசித்து வருபவர் உமேஷ் (22). இவரது அண்ணனின் மனைவி மஞ்சுவின் தங்கையுடன் உமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களில் அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உமேஷின் பெற்றோர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வேறு இடத்தில் அவருக்கு திருமண ஆலோசனை செய்து முடிவு செய்தனர். இதை அறிந்த மஞ்சுவின் தங்கை மன உளைச்சலில் ஆழ்ந்தார். அவர் உமேஷை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், உமேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கடும் கோபமடைந்த மஞ்சு, தன் தங்கையின் அவமானத்திற்கு பழிவாங்க முடிவு செய்தார். கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, மஞ்சு அமைதியாக எழுந்து உமேஷின் அறைக்குள் நுழைந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த உமேஷின் மீது தாக்குதல் நடத்தி, கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி துண்டித்தார்.

இதனால் கடும் வலியால் அலறிய உமேஷின் சத்தத்தைக் கேட்ட குடும்பத்தினர் அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தற்போது உமேஷின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் குறித்து பிரயாக்ராஜ் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மஞ்சுவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.