கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி தனது தம்பியுடன் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர், “நான் உங்களை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விடுகிறேன்” என்று கூறி அவர்களை தனது ஆட்டோவில் ஏற்றினார். சிறிது தூரம் சென்றதும், அந்த ஆட்டோவில் இன்னொருவர் ஏறினார். அவர் தனது நண்பர் என்று கூறிய டிரைவர், சிறுமியை கால் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்றவுடன், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அதற்கு சிறுமி கடுமையாக எதிர்த்ததால், இருவரும் சேர்ந்து சிறுமியையும், அவரது தம்பியையும் தாக்கினர். தாக்குதலில் சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவனை கொலை செய்வோம் என மிரட்டி, இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் சிறுமியிடம் இருந்த செல்போனையும் பணத்தையும் பறித்துக்கொண்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

மயக்கத்திலிருந்து தன்னையும் தம்பியையும் மீட்ட சிறுமி, தாவணகெரே டவுன் பஸ் நிலையத்துக்குத் திரும்பி வந்தார். அங்கு இருந்த வியாபாரிகள் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவரையும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர்.

இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகெரே மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.