ஒரு 24 வயது அமெரிக்கப் பெண், தன் காதலன் டேனுடன் ஏற்பட்ட விசித்திரமான சம்பவத்தை ரெடிட் தளத்தில் பகிர்ந்து, மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாத பயணம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். டேன் முதலில் இதை ஆதரித்தார் ஆனால் பயண தேதி நெருங்கியதும், அவரை போலி நிச்சயதார்த்த மோதிரம் அணியச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். காரணம், அங்கு உள்ளவர்கள் அவரை திருமணமானவராக நினைத்து தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று.
ஆனால் அவர்கள் இன்னும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவில்லை, இது அவருக்கு மிகவும் அசௌகரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவர் குடும்பத்துடன் செல்வதால் யாரும் அணுக மாட்டார்கள் என்று விளக்கினாலும், டேன் தன் பேச்சில் உறுதியாக இருந்துள்ளார். அவர் சிறுவயதில் இருந்தே ஊர்வன விலங்குகளை விரும்புபவர், ஆஸ்திரேலியாவின் ஆபத்தான உயிரினங்கள் பற்றிய ஆவணப்படம் பார்த்து அங்கு செல்ல வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். ஆனால் இந்த பயணத்துக்கு முன்பே உறவு பிரச்சினையில் சிக்கியது.

ஒரு நாள் பேஸ்பால் போட்டி பார்க்கும்போது டேன் போலி வைர மோதிரத்தை கொடுத்து, ஆஸ்திரேலியாவில் அணியச் சொன்னார். அவர் மறுத்ததால் சண்டை ஏற்பட்டு, டேன் சோபாவில் தூங்கினார். மறுநாள் டேனின் அம்மா செய்தி அனுப்பி, மோதிரம் அணிந்தால் டேனுக்கு ஆறுதலாக இருக்கும் என்றார். இது அவரை இன்னும் கோபப்படுத்தியது. அவர் டேனை நேசிப்பதாகவும், எதிர்காலத்தில் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாலும், நிச்சயதார்த்த மோதிரம் ஒரு உறுதிமொழியின் அடையாளம் என்று கருதி, போலியாக அணிய மறுக்கிறார். ரெடிட் பயனர்கள் அவரை ஆதரித்து, டேனின் நடத்தை அதிகப்படியான பாதுகாப்பின்மை என்று கூறுகின்றனர்.
