தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகளையும், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பயணங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திருப்பத்தூர் ஜோலர்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரங்களில் மூழ்கி, நிர்வாகத்தை கவனிக்காத திமுக அரசு, இப்போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் அவசரமாக முகாம்கள் நடத்தி, அரசுப் பள்ளிகளையும் அலுவலகங்களையும் செயலிழக்கச் செய்கிறது என்று அண்ணாமலை கண்டித்துள்ளார். இந்த முகாம்கள், நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அரசு இயந்திரத்தின் தாமதத்தின் சாட்சிகள்தான் என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம்கள் நடத்துவதன் அகம்பாவம் எங்கிருந்து திமுக அரசுக்கு வருகிறது என்பதை அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் கையாலாகாத்தனத்துக்கு ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? என்று அவர் கேட்டுள்ளார்.
ஏற்கனவே திருச்சி உப்பிலியாபுரம் அரசுப் பள்ளியில் இதேபோல் விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை பாஜக கண்டித்தபோது, இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவற்றை கண்டுகொள்ளாமல் மாதம் தோறும் வெளிநாட்டு சுற்றுலாவில் பிசியாக இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டு, இப்போது வெட்டி விளம்பரங்களுக்கு எதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
