உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் ஜவா பகுதியில், அக்டோபர் 12 ஆம் தேதி அதிகாலை நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான கரண் எனும் இளைஞரை, அவரது வீட்டிலிருந்து பலரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், அவரை கடுமையாக அடித்துப் பின்பு கூரிய ஆயுதங்களால் பலத்த காயங்களுடன் கொலை செய்துள்ளனர். இதை அறிந்த கரணின் குடும்பம் மற்றும் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். இதனைத் தொடர்ந்து, ஜவா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் இரு சமுதாயங்களை சார்ந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போலீஸ் வலையமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரணின் தாயின் புகாரின் அடிப்படையில், முக்கிய குற்றவாளி அர்ஷத் கான் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எட்டு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தொடரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார அலுவலர் சர்வம் சிங் உறுதியாக தெரிவித்துள்ளார்.