கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில் வசிக்கும் ஹரீஷ் என்பவருடைய கடையில், அவரது உறவினரான ஸ்ரேயாஸ் (வயது 22) கடந்த சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்த ஸ்ரேயாஸ், சமீபத்தில் அந்த பெண் திருமணத்துக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், பணம் இல்லாததால்என்ன செய்வது என்று தவித்துள்ளார்.
இந்த நிலையில், ஹரீஷிடம் நகையும், பணமும் அதிகமாக இருப்பதை அறிந்த ஸ்ரேயாஸ், காதலிக்காக வாழ்க்கையே தவறான வழியில் பயணிக்க முடிவெடுத்தார். ஹரீஷ் வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அவரது வீட்டுக்குள் நுழைந்து 416 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3.46 லட்சம் பணம் என மொத்தம் ரூ.52.32 லட்சம் மதிப்புடைய பொருட்களை திருடி தலைமறைவானார். இது குறித்து தெரிந்த ஹரீஷ், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் ஸ்ரேயாஸை கைது செய்தனர். அவரிடம் இருந்து முழுமையான கொள்ளை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காதலியை திருமணம் செய்வதற்கு இப்படி தவறான வழியை தேர்ந்தெடுத்த அவரது செயல், சமூகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
