விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார், சென்னையில் கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அவர், சமீபத்தில் ஒரு செல்போன் செயலியின் மூலம் பெண்களை தேட ஆரம்பித்தார்.
அந்தச் செயலியில் “அஸ்விதா” எனும் பெயரில் உள்ள கணக்கில் இருந்த அழகான புகைப்படங்கள் மற்றும் உல்லாச அழைப்பு செய்தியை பார்த்ததும், அவர் வலசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு சென்றார்.
அங்கு அழகான பெண் இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற உதயகுமார், உள்ளே சென்றதும் அஸ்விதா என்ற பெயரில் இருந்தவர், திருநங்கை முஸ்தபா (30) என்பதையும், அவரது நண்பர் தினேஷ்குமார் (28) என்பவரும் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இருவரும் சேர்ந்து உதயகுமாரை சரமாரியாக தாக்கியதோடு, கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனையும், பணத்தையும் பறித்துள்ளனர். மேலும், இதைப் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வெளியே துரத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியே பேச தயங்கிய உதயகுமார், பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், முஸ்தபா மற்றும் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, வாலிபர்களை உல்லாசம் என்ற பெயரில் வீட்டுக்கு வரவழைத்து, தாக்கி, பயமுறுத்தி நகை, பணம், செல்போன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவற்றை பறித்து வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடமிருந்து ரூ.95,000 ரொக்கம், 11 செல்போன்கள், ஒரு கத்தி மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்ந்தும் இயங்கி வரும் மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலர் அவமானம் என்று பயந்து புகார் செய்யாததை தவறாக பயன்படுத்தி, இந்த கும்பல் பல வாலிபர்களிடம் மோசடி செய்து வந்திருப்பது வெளியாகிஉள்ளது.
