தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை கட்சிகள் அமைத்து வருகிறது. அந்த வகையில் ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக சீமான் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்திலேயே நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். மேலும் பிறர் தோள் மீது ஏறி நின்று எங்களுடைய உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை என்றார்.
