சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்ற சம்பவம் புது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி, தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, 71 வயது ராகேஷ் கிஷோர் நீதிபதிகள் அமர்ந்த மேடையை நெருங்கி, தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.

உடனடியாக காவலர்கள் அவரைத் தடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது அவர், “சனாதன தர்மம் இழிவு படுத்தப்பட்டால் அதை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்று கூச்சலிட்டார். இதன்பின், பார் கவுன்சில் அவரது வழக்கறிஞர் உரிமையை தற்காலிகமாக ரத்து செய்தது. போலீசார் அவரது காலணியை திருப்பி அளித்ததும் கூடுதல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை விமர்சித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆவேசமாக பேசினார். “குற்றவாளியின் பெயர் ராகேஷ் கிஷோர் என்பதால் அவரை கைது செய்யவில்லை, ஆனால் ஆசாத் என்று இருந்தால் நிலைமை வேறு வகையாக இருக்கும்.

டெல்லி போலீசார் யூ.ஏ.பி.ஏ. போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி அவரை கைது செய்திருப்பார்கள். பா.ஜ.க. அவரை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பிரச்சினை செய்திருக்கும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ராகேஷ் கிஷோர், செப்டம்பர் 16-ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் விஷ்ணு சிலையை மீட்க கோரிய வழக்கில், தலைமை நீதிபதி “கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேலி செய்ததால் காயமடைந்ததாகக் கூறி, இது தனது எதிர்வினையாகும் என்றும், கடவுள் தான் தன்னை செய்ய வைத்ததாகவும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.