பீகாரில் தற்போது பாஜக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ஆம் தேதி, இரண்டாம் கட்டம் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில், ஒரு கட்சி தனியாக ஆட்சியை அமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பீகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்தால், மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டத்தை இயற்றுவோம். புதிய அரசு பொறுப்பேற்ற 20 நாட்களுக்குள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் சட்டத்தைக் கொண்டு வந்து, 20 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.