நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் 60-வது ஆண்டு வைர விழா கொண்டாட்டம், மாவட்ட ஆட்சியர் சுகுமார், சபாநாயகர் அப்பாவு மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்களைப் பற்றி பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘இதயம் காப்போம்’ திட்டத்தின் மூலம், கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு இதயப் பிரச்னைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு, இதுவரை 40 ஆயிரம் பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர். வல்லநாடு சுகாதார நிலையத்தில் இத்திட்டத்தால் 26 பேர் பயனடைந்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளதாகவும், இத்திட்டங்களுக்காக ஐ.நா. பொதுச்சபை விருது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்ட அமைச்சர், உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை பதிவு செய்யும் வகையில், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கல்வெட்டு அமைக்கும் திட்டம் அடுத்த வாரம் சென்னையில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இத்தகைய கல்வெட்டு அமைக்கப்படும் என உறுதியளித்தார். இத்திட்டம், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், தானம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
