கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமான சூழ்நிலைகளை ஆராயும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், கரூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இரு பேரை கைது செய்தனர். இதே விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை மேலும் ஆழமாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூருக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டது. பின்னர், அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சிறப்புக் குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சிறப்புக் குழு விசாரணையை ரத்து செய்ய கோரி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.