சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டலின் ஒரு அறையில் ஏராளமானோர் இசையுடன் நடனமாடிக் கொண்டிருந்தனர். விசாரணையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது, அதில் சிலர் போதையில் உற்சாகமாக நடனமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அந்த ஓட்டலின் மேலாளர் சுகுமாரும் கைது செய்யப்பட்டார்.

கைதானவர்களில், பெங்களூருவைச் சேர்ந்த பிரவல்லிகா (23) என்பவர் பிரபல இசையமைப்பாளரின் மகள் என தெரியவந்துள்ளது. தற்போது இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார். கைதானவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில், நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.