தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக விரைவில் வருவேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் எப்போது கரூருக்கு வருவார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் இதுவரை நேரில் சந்திக்காதது குறித்து நீதிமன்றமும் கவனம் செலுத்தியது. இதே சமயம், விஜய் வீடியோ கால் மூலம் கரூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
“தன்னிடம் குற்ற உணர்வு இல்லையெனில், த.வெ.க. தலைவர் விஜய் தைரியமாக தனது தோழர்களுடன் சேர்ந்து நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்திருக்கலாம். ஆனால், தனது மனசாட்சியே தன்னை குற்றம் சாட்டுவதால் அவருக்கு வெளியே வரத் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் வீடியோ கால் மூலம் பேசுகிறார்,” என்றார்.