சென்னை செங்கல்பட்டு போரூர் பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வாலிபர் சிறுமியை கொலை செய்ததோடு மட்டுமின்றி தன்னுடைய தாயாரையும் கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது சூதாட்டத்திற்கு அடிமையான தஷ்வந்த் தன்னுடைய பெற்றோர் செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானவர்.

மும்பையில்  இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து பின்னர் சென்னை அழைத்துவந்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் வாலிபர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இந்த நிலையில் தற்போது வாலிபருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் குற்றத்தை உறுதி செய்ய தவறவிட்டதாக கூறிய உச்ச நீதிமன்றம் உடனடியாக அந்த வாலிபரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.