தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த கட்சியினருக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலையில் இது தொடர்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை இனி எந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் கூறியுள்ளது. அதன் பிறகு சிபிஐ விசாரணை கோரிய  தமிழக வெற்றி கழகத்தின் மனு உள்ளிட்ட நான்கு மனுக்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்த நிலையில் நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்படும் நிலையில் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களை முன் வைத்தனர். அதாவது கரூர் பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது ரவுடிகள் நுழைந்தனர்.

காவல்துறை எதற்காக தடியடி நடத்தியது.? வேலுச்சாமி புரத்திற்கு பதிலாக வேறு இடத்திற்கு அனுமதி கேட்ட நிலையில் அன்றைய தினம் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் வேறு வழி இல்லாமல் அந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டோம். விஜயின் பரப்புரையின் போது காலியான ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டது. இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.? கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் மாநில அரசுக்கும் தொடர்பு உள்ளது. எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததில் காவல்துறைக்கு உள்நோக்கம் இருக்கிறது.

எங்களுக்கு அறிவுரை வழங்கியதாக எஃப் ஐ ஆரில் காவல்துறை கூறியுள்ள நிலையில் என்ன அறிவுரை என்பதை அவர்கள் கூறவில்லை. கரூரில் நடந்தது விபத்து திட்டமிட்ட செயல் அல்ல. தொண்டர்களை கொல்ல வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். மேலும் அந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர். மதியழகன் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.