தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் முக்கிய நிர்வாகிகளின் கைது தொடர்பான முன்ஜாமின் மனுக்களின் விசாரணையும் இன்று வந்தது. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை சிபிஐ விசாரணை கோரிய மனு உள்ளிட்ட நான்கு மனுக்களை தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் நாமக்கல் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதனை மறுக்க முடியாது எனவும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிரச்சாரத்திற்கு அனுமதி  வழங்கப்பட்டது எப்படி எனவும் அது தொடர்பான கடிதத்தை காட்ட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டங்கள், பேரணி மற்றும் ரோட் ஷோ போன்றவற்றை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் வகுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி வீட்டிற்கு சென்று நீ தான் கதிரேசனா.? தலைவர் மேல கேஸ் போட்டு இருக்கியாமே. வீட்ல இருக்காதே, எங்கேயாவது ஓடிப் போயிரு என மிரட்டியதாக அவரது வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் பொதுநல வழக்கு தொடர்ந்தவரை மிரட்டியதாக பரபரப்பு பேட்டி கொடுத்தார்.