கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் துயர நிகழ்வாக முடிந்தது. கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற இந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணங்களை விசாரிக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த ஆணையம் தொடர்ந்து சாட்சிகளின் வாக்குமூலங்கள், பதிவுகள், பிரதேச ஆய்வுகள் என விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

கரூர் போலீசார், சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இருவரை இதுவரை கைது செய்துள்ளனர். திடீர் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட தாக்கத்தை உணர்ந்த விஜய், “தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கட்ட பிரசார நடவடிக்கையை மேற்கொள்வது உரியதல்ல” எனக் கருதி, ஏற்கனவே திட்டமிட்டிருந்த தனது பிரசாரத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார்.

இந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்ட விஜய், கரூர் நிகழ்வால் துவண்டு விட வேண்டாம் என்றும், மீண்டும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இது பற்றி அவர் கூறியதாவது,  “கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம். இறந்தவர்களின் குடும்பங்களை நான் விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுங்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை.

ஆனாலும், அனைவரும் புதிய வேகத்துடன் செயல்பட வேண்டும்.
துயரத்தில் இருந்து கட்சியாகவும், தனிப்பட்ட முறையிலும்,
மீண்டு வர வேண்டிய முயற்சிகளை செய்வோம்.” மேலும் விழுப்புரம், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருந்த பிரசார நிகழ்வுகள் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விஜயின் இந்த ஆறுதல் உரையால் கட்சி நிர்வாகிகள் புதிய உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.