தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப். 2-ஆம் தேதி மாலை ஒரிசாவின் கோபல்பூர் அருகே கரையை கடந்தது. சௌராஷ்டிரா கடலோர பகுதியில் இருந்த மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக். 1-ஆம் தேதி காலை வடகிழக்கு அரபிக்கடலுக்கு நகர்ந்தது. அதன் பின்னர் அது வலுப்பெற்று, அக். 3-ஆம் தேதி காலை, துவாரகா (குஜராத்) நகரிலிருந்து மேற்கு தென்மேற்கே 240 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதுடன், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரி மாவட்டங்களில் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையிலும் புறநகரிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை, அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 32°C முதல் 33°C வரைவும்,
குறைந்தபட்ச வெப்பநிலை 24°C முதல் 25°C வரை இருக்கலாம்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடலோரம், அரபிக்கடல் மற்றும் குஜராத் கடலோரம் உள்ளிட்ட பல இடங்களில் மணிக்கு 60–80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்,” என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.