ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள விராட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில், 2-ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரமான சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதனைப் பற்றிய வீடியோ கடந்த சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைப் பார்த்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில், அஜய் என்ற பள்ளி வாகன ஓட்டுநரும், ரீனா என்ற முதல்வருமாகிய இருவரையும் ஹரியானா போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர். இருவரும் பானிபட்டில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் 2 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
पानीपत: स्कूल में मासूम के साथ हिंसा!
7 साल के बच्चे को खिड़की पर उल्टा लटकाया, वैन ड्राइवर और प्रिंसिपल गिरफ्तार 👉#HaryanaPolice #PanipatPolice@cmohry @NayabSainiBJP @sumitamisra @ssk303 pic.twitter.com/pDXGN45FAS— Haryana Police (@police_haryana) September 29, 2025
பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த தகவலின்படி, அவர்களது மகன் பள்ளி வகுப்பறை ஜன்னலில் கயிறு மூலம் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும், மற்றொரு வீடியோவில், பள்ளி முதல்வர் ரீனா, வகுப்பில் உள்ள பிற குழந்தைகளை அறைந்ததையும் காணலாம்.
இந்நிலையில், ஹரியானா கல்வித் துறை, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஸ்ரீஜன் பப்ளிக் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனினும், முதல்வர் ரீனா, தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “அஜய் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வேலையிலிருந்து நீக்கப்பட்டவர். சில பெற்றோர்கள் அவரது மீதான பழைய புகார்களை முன்வைத்து இப்போது திட்டமிட்ட முறையில் குற்றம் சுமத்துகிறார்கள்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. பள்ளியில் ஒரு பெண் மாணவியிடம் தவறாக நடந்த இரு சிறுவர்களை சிறிது கண்டித்ததுதான் நடந்தது; அது பற்றியும் அவர்களது பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது,” என தெரிவித்துள்ளார். மேலும் மாணவன், “அஜய் மாமா என்னை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து, அந்த வீடியோவை எடுத்தார்” என தனது பெற்றோரிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
