உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரிலிருந்த முதியவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தன்னலமின்றி காப்பாற்றிய வீரம், பெருமையாக பேசப்படுகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மதுரா மற்றும் ஹாத்ராஸ் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மதுராவில் உள்ள புதிய பேருந்து நிலைய பாலத்தின் கீழ் தண்ணீர் பெரிதளவில் தேங்கியது. அந்த வெள்ளத்தில் ஒரு Wagon R கார் சிக்கிக் கொண்டது. காரின் உள்ளே ஒரு முதியவர் மற்றும் மேலும் ஒருவர் சிக்கியிருந்தனர்.
இதற்கிடையே, ஒரு போக்குவரத்து காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை நெருங்கி கதவைத் திறந்து முதியவரை வெளியே எடுத்தார். பின்னர் மற்றொரு நபரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவரின் இந்த அவசர செயல்திறன் ஒரு பெரிய உயிரிழப்பைத் தவிர்த்தது.
मथुरा
➡ट्रैफिक पुलिस के सिपाही की सूझबूझ
➡सिपाही की सूझबूझ से टला बड़ा हादसा
➡बारिश से नए बस स्टैंड पुल के नीचे था पानी
➡कार सवार ने कार को पानी में घुसा दिया
➡सिपाही ने गेट खोलकर बुजुर्ग को निकाला#Mathura #TrafficHero | @mathurapolice pic.twitter.com/eo4xwZU6VH— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 30, 2025
இந்த வீடியோவில், வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரில் உள்ள நபர்கள் உதவிக்காக சைகை செய்வதும், காவலர் விரைந்து வந்து கதவைத் திறப்பதும் தெளிவாக காணப்படுகின்றன. இதனைப் பார்த்த சமூக வலைதள பயனாளர்கள் காவலரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
மேலும் ஹாத்ராஸ் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரா மாவட்டம் மந்த் தெஹ்ஸில் பகுதியில் உள்ள நாக்லா ஜக்ரூபா கிராமத்தைச் சேர்ந்த மீரா தேவி (வயது 52) என்ற பெண், மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்தார். இதனிடையே, லக்னோவில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
