டெல்லியின் ஆனந்த் விஹார் மற்றும் பீகாரின் சீதாமர்ஹி இடையே இயங்கும் லிச்சிவி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14006) ரயிலில், ஒரு பயணியை பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) ஒருவர் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் S7 பெட்டியில் பயணித்த ஒருவர், டிக்கெட் இல்லாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டடிந்த TTE, அவரிடம் அபராதம் வசூலிப்பதற்குப் பதிலாக, அவரை அடிக்கத் தொடங்கினார்.

வீடியோவில், TTE ஒருவர் பயணியின் சட்டையைப் பிடித்துத் தூக்கிச் செல்கிறார், இதனால் சட்டை கிழிந்துவிட்டது. அதேவேளை, பயணி இந்த சம்பவத்தைக் பேஸ்புக் லைவ் மூலமாக நேரடியாக வெளியீடு செய்யத் தொடங்கியதும், TTE அவரை மேலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த அடிதடியில் பயணியின் தங்கச் சங்கிலி அறுந்தது என்றும் அவர் வீடியோவில் சொல்லும் காட்சி காணப்படுகின்றது. “நான் அபராதம் செலுத்த தயாராக இருக்கிறேன்; ஆனால், இதற்காக என்னை அடிக்கவேண்டுமா?” என அவர் கேட்பதும் அதில் பதிவாகியுள்ளது.

 

சம்பவ நேரத்தில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அமைதியாக இருந்தனர், யாரும் அவர் மீது தாக்குதல் நடக்கக் கண்டும் கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வீடியோவில் மற்றொரு TTEயும் அருகில் இருப்பது காணப்படுகின்றது. ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், பயணியைத் தாக்கிய TTE-ஐ கடுமையாக விமர்சித்து, அவரது நடத்தை ரயில்வே பணியாளர் ஒருவருக்கேற்ப அல்ல என சாடியுள்ளனர். மேலும் ரயில்வே துறை இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.