மராட்டிய மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் ஒருவர் உத்தரப்பிரதேசம் மதுராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 25-ம் தேதி, சாலையோரத்தில் ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் ஒரு பாலியல் தொழிலாளி எனும் தகவலும் வெளியாகியது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த பெண்ணுடன் கடைசியாக ஆட்டோ டிரைவர் ஒருவர் காணப்பட்டதை கண்டறிந்தனர். மேலும் இருவருக்கும் இடையில் சண்டை நடைபெறும் காட்சியும் வீடியோவில் பதிவாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, சந்தேக நபர் சந்திரபால் ராம்கிலாடி (வயது 34) என்பதும், அவர் மதுராவில் பதுங்கியிருப்பதும் தகவலாக கிடைத்தது. அதன்பேரில், அதிரடியாக மதுராவுக்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், பணம் தொடர்பான தகராறின் காரணமாக அவர் பாலியல் தொழிலாளியை கொலை செய்ததாக சந்திரபால் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை மும்பைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொடூரக் கொலை சம்பவம், அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.