தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாலும், முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் கலாச்சாரம் வழக்கமாகவே இருந்து வருகிறது.
தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 2 நாள் தொடர் விடுமுறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, மக்கள் பேரெதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்கள் மற்றும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில்வே நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சிறப்பு பஸ்கள் மூலமாக 1 லட்சம் பயணிகள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலமாக 3 லட்சம் பேர் என மொத்தம் 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். பண்டிகையை முடித்துவிட்டு மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், அவர்களுக்காக மீண்டும் சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பயணிகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை, ரெயில்வே போலீஸ் மற்றும் நகரப் போக்குவரத்து போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
