நிலவின் மேற்பரப்பில் துருப்பிடித்தல் நிகழ்ந்து வருவதாக சீனாவின் மக்காவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜிலியாங் ஜின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், நிலவின் துருவ பகுதிகளில் “ஹெமடைட்” (Hematite) எனப்படும் ஒரு வகை இரும்பு ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்கும் செயல்முறையைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
துருப்பிடித்தலுக்கு ஆக்சிஜன் மற்றும் நீர் தேவைப்படும் நிலையில், இவை இரண்டும் நிலவில் அதிகளவில் இல்லாததால், விஞ்ஞானிகள் அதற்கு காரணம் என்னவென்பதை ஆராய்ந்து வந்தனர். இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் துருப்பிடித்தலுக்குப் பூமி தான் காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் ஆக்சிஜன் நிறைந்த காற்று, சூரிய கதிர்களின் தாக்கத்தில் நிலவின் துருவ பகுதிகளை அடைந்து, அங்கே இரும்பு உருப்படிகளைத் துருப்படையச் செய்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கோட்பாட்டை அவர்கள் ஆய்வக சோதனைகளால் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியா இயக்கிய சந்திரயான்-1 விண்வெளி திட்டத்தின் போது, நிலவின் துருவப் பகுதிகளில் ஹெமடைட் இருப்பது முதல்முறையாக கண்டறியப்பட்டது. அந்த தகவல்களும் இக்கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் இந்த துருப்பிடித்தலைப் பற்றிய புரிதல், எதிர்கால நிலவு ஆய்வுத் திட்டங்களிலும், நிலவில் மனிதர்கள் வாழும் முயற்சிகளிலும் முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
