திருவனந்தபுரம் நீதிமன்றம், 45 வயதான ஹசன் குட்டி என்கிற கபீர் ஹைதராபாத் தம்பதியின் இரண்டு வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு முன்பும் இவர் மீது இதேபோன்ற POCSO வழக்கு இருந்தது. இந்த தீர்ப்பின் தண்டனை அக்டோபர் 3 அன்று அறிவிக்கப்படும்.
2024 பிப்ரவரி 19 அன்று, ஹைதராபாத்தில் இருந்து தேன் விற்க வந்த தம்பதியின் குழந்தை, பெற்றோருடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஹசன் குட்டி அவளை கடத்தினார். அவர் குழந்தையை பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அருகே உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தார். பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து, அவர் அவளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர், உடனே காவல்துறையில் புகார் அளித்தனர். மறுநாள் மாலை 7:30 மணியளவில், குழந்தை மயங்கிய நிலையில் பிரம்மோஸ் வளாகச் சுவருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, SAT மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில், 100-க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் ஹசன் குட்டியை அடையாளம் கண்டனர்.
அவரோ தலையை மொட்டை அடித்து விட்டு பழனிக்கு தப்பி ஓடி மறைந்திருந்தார். ஆனால், 13 நாட்களுக்குப் பிறகு கொல்லத்தில் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதியானது. ஹசன் குட்டியின் உடைகளில் இருந்த முடி மாதிரிகள் மற்றும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் குழந்தையுடன் பொருந்தியதாக மரபணு பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர், குழந்தை குழந்தைகள் நலக் குழுவின் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டது.
