தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்கு விஜய் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதை முன்னிட்டு, கூட்டங்களில் கலந்து கொள்கின்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சில முக்கிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “விஜயின் வாகனத்தை பின்தொடரவேண்டாம், கட்டடங்கள் மற்றும் மின்கம்பங்களில் ஏறுவது தவிர்க்கப்பட வேண்டும். பிறரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எதையும் பேசக்கூடாது.
அதேபோல், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் ஒழுங்காக நடைபெறும் வகையில் ஒத்துழைப்பை வழங்குமாறும், தவெக தலைமை தனது அறிவிப்பில் தொண்டர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது.
