புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி (70) என்ற மூதாட்டி, தனது மூன்றாவது மகளான அனந்தநாயகி ( 37) என்பவரிடம் ரூ.2 லட்சம் மோசடிக்கு ஆளான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு குடும்பத் தேவைக்காக தாயிடம் பணம் வாங்கிய மகள், வீட்டு பத்திரத்தை அடகு வைத்து, “பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு பத்திரத்தை மீட்டுத் விடுகிறேன்” என கூறியிருந்தார்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அனந்தநாயகி பத்திரத்தையும் பணத்தையும் திருப்பி தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் கூறியுள்ளார். இதற்கிடையில், அந்த பத்திரத்தை சிலரிடம் காட்டியபோது, அது ஒரிஜினல் அல்ல, கலர் ஜெராக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது. அதைக் கேட்டதும் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். மகளிடம் எச்சரித்து கேட்டபோதும், பத்திரத்தையோ பணத்தையோ திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நெருக்கமான உறவின் பெயரில் நடந்த மோசடியை உணர்ந்த ராஜேஸ்வரி, தனது மகளுக்கு எதிராக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் அனந்தநாயகி மீது மோசடி குற்றச்சாட்டு கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
