கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, மருத்துவர் ஒருவர் எளிய வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். முதலில், தினமும் 12 மணி நேரம் உணவு எடுக்காமல் இருப்பது முக்கியம். இதில் பாதி நேரம் இரவு தூக்கத்தில் கழியும். உதாரணமாக, இரவு 8 மணிக்கு உணவு சாப்பிட்டால், மறுநாள் காலை 9 மணிக்கு அடுத்த உணவை எடுக்கலாம். இது கல்லீரலுக்கு ஓய்வு கொடுத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தும். இரவு நேர வேலை செய்பவர்கள், நள்ளிரவுக்கு பிறகு உணவு உண்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது கல்லீரலை பாதிக்கலாம்.
அடுத்ததாக, கார்போஹைட்ரேட் நிறைந்த மாவு உணவுகளை குறைப்பது அவசியம். இவை கல்லீரலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கும், இது காலப்போக்கில் சிக்கலாகலாம். எனவே உணவு விஷயத்தில் அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களையும், நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக பயறு வகைகளையும் உணவில் சேர்க்கலாம். ஒரு வேளை உணவிலாவது அதிக பழங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த எளிய மாற்றங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
