இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாயில் நடைபெறும் 2025 ஆசியா கப் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஒருவருக்கொருவர் மோதவுள்ள நிலையில், முந்தைய போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையால் போட்டி சூழ்நிலை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது விளையாட்டு நெறிமுறைக்கு எதிரானது என தெரிவித்த பிசிபி, போட்டியின் மேற்பார்வையாளர் ஆன்டி பைக்ராஃப்ட்டை வெளியேற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்து, பைக்ராஃப்ட்டை மட்டுமல்லாமல் இந்தியா – பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 போட்டிக்கும் அவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், பாகிஸ்தான் அணியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நடந்த போட்டியிலும் பைக்ராஃப்ட் மேற்பார்வையாளராக இருந்தபோதும், எந்த விதமான விதி மீறலும் பதிவாகவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் ஆத்திரம் மேலும் பெருகி, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோர் இணைந்து லாகூரில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மேலும், பிசிபி தனது கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், தொடரிலிருந்து விலகும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஆனால் ஐ.சி.சி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் உள்ளது.
இதற்கிடையில் பிசிபி மீதான ஒழுங்குவிதிமுறைகள் மீறல் மற்றும் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பும் நடவடிக்கைகளுக்காக, ஐ.சி.சி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் மோதலில் மீண்டும் கைகுலுக்கும் விவகாரம் இல்லாமல் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
