2025 ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில், இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ஓமன் அணி கடைசி வரை போராடியும் 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தோல்வியின்றி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியது.

சூர்யாவின் நடத்தை பாராட்டுக்கு உரியது!

இந்த வெற்றியை விட, ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனிதநேயம் நிறைந்த நடத்தை. போட்டிக்குப் பின், ஓமன் அணியின் வீரர்களை நேரில் சந்தித்த சூர்யா, “நீங்கள் இன்று மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள்.

பாகிஸ்தான், யுஏஇ போன்ற அணிகளை விட நீங்கள் சிறந்த பார்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். இந்த  நுணுக்கங்களை  தொடருங்கள். இன்று விளையாடியதை வாழ்க்கையில் மறக்க வேண்டாம்” என உற்சாகம் அளித்தார்.

வீரர்களுடன் உரையாடல்… மனங்களை வென்ற காட்சி

போட்டிக்குப் பின், ஓமன் வீரர்கள் சூர்யாவை சுற்றி நின்று விளையாட்டுத் திறன்கள் குறித்தும், டி20 கிரிக்கெட்டில் அவரின் அனுபவங்களைப் பற்றியும் பல கேள்விகளை எழுப்பினர். இதற்கு மிக நிதானமாக பதிலளித்த சூர்யா, அவர்களுடன் நேரம் கழித்தார்.

இந்த உரையாடல், விளையாட்டுத் தரத்தை விட மனிதத் தரத்தை பிரதிபலித்தது. ஓமன் கேப்டன் ஜதிந்தர் சிங் கூறும்போது, “சூர்யா எங்களை  மிக மென்மையாகப் பாராட்டினார். அவரிடம் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர் மிகவும் அன்போடு பதிலளித்தார். அவருடன் உரையாடிய அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது” என தெரிவித்தார்.

“>

சமூக வலைதளங்களில் வைரல் புகைப்படம்!

இந்திய அணியினர், போட்டிக்குப் பின் ஓமன் வீரர்களுடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் “இது தான் உண்மையான விளையாட்டு மனப்பான்மை” எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் போன்ற அணிகளும் சூர்யாவின் அணுகுமுறையை பாராட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த போட்டி இந்திய அணிக்கான வெற்றி மட்டும் அல்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மனதைக் தொடும் ஒரு மனிதநேயம் நிறைந்த தருணமாக அமைந்தது.