நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூரை சேர்ந்த அபு முகமது சாஜிதனின் மகன் முகமது அனாஸ் (வயது 18), குன்னூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஒருதலை  காதலால் மனவேதனையில் ஆழ்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகமது அனாஸ், அந்த பகுதியை சேர்ந்த கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவியிடம் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி அவரது காதலை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்துள்ள முகமது அனாஸ், கடந்த 17-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உயிர் வாழ பிடிக்கவில்லை, பெற்றோர்களையும், பூனைக்குட்டியையும் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று குறுந்தகவலை பதிவு செய்துள்ளார்.

இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேல்குன்னூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து குன்னூர் டைகர் ஹில்லில் உள்ள தேயிலை தோட்டக் கழகத்தின் எஸ்டேட் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அங்கு முகமது அனாஸ் பயன்படுத்திய பை மற்றும் மதுபாட்டில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் மதுகுடித்த பிறகு 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அந்த நாளிலேயே இரவு நேரமாகிவிட்டதால் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து 3 நாட்கள் வெயிலும், மழையும் மாறி மாறி பெய்தபோதிலும், மீட்புப் படையினர் விடாமுயற்சியுடன் தேடினர். இந்நிலையில், 4-வது நாளான நேற்று, முகமது அனாஸின் உடல் குறித்த பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணைகளுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காதல் தோல்வியால் ஏற்பட்ட துயரம், ஒரு இளம் உயிரை பறித்த சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.