நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், தமிழக  வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி மற்றும் காவல்துறை நிபந்தனைகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் தவறானவை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அலையாத்திக் காடுகள் – அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?

விஜய் கூறியபடி, “அலையாத்திக் காடுகளை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்பது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், 2021ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்த சதுப்புநில காடுகள், தற்போது 90 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாகையில் கடல்சார் கல்லூரி இல்லை என்பது தவறு!

விஜய் கூறிய “நாகையில் கடல்சார் கல்லூரி ஏதும் இல்லை” என்பது கூட தவறான தகவல் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரதமருக்கே நிபந்தனை விதித்த காவல்துறை!

“மக்களை சந்திக்க அனுமதி கிடையாது என்கிறார்கள். பிரதமர் வந்தால் நிபந்தனை போடுவீர்களா?” என விஜய் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், கடந்த 2024 ஏப்ரல் 9ம் தேதி சென்னை பேரணிக்கு பிரதமருக்கே 20 நிபந்தனைகள் காவல்துறையால் விதிக்கப்பட்டிருந்தது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அரசின் தகவல் சரிபார்ப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.