கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காவதி தாலுகாவின் அயோத்யா கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், ஆன்லைன் கேம் விளையாடுவதற்காகத் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

மேலும் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் மீதும், தடுத்த சகோதரி மீதும் தாக்குதல் நடத்தி, இருவரையும் கொன்றுவிட்டு, தாயையும் படுகாயப்படுத்தியுள்ளான். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் உலுக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளான். படுகாயமடைந்த அவனது தாய் மற்றும் சிறுவன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபைல் கேம் விளையாடும் பழக்கம் இளைய தலைமுறையினரை எந்த அளவிற்கு மனரீதியாகப் பாதித்து, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட வைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சோகமான சான்றாக அமைந்துள்ளது.