இந்தியாவிலேயே முதன்முறையாக, மெட்ரோ, புறநகர் ரெயில், மாநகர பேருந்து, கேப் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தையும் ஒரே பிளாட்பாமில் ஒருங்கிணைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட “சென்னை ஒன்று” (Chennai One) மொபைல் செயலி, செப்டம்பர் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) இரண்டாவது ஆணையக் கூட்டம், தமிழ்நாடு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில், சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5,904 சதுர கி.மீ) 2023-2048 விரிவான போக்குவரத்து திட்டத்திற்கும் (Comprehensive Mobility Plan) ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் – மக்கள் மற்றும் பொருட்கள் தடையின்றி நகரம் முழுவதும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் வசதியை ஏற்படுத்துவது. இது ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சூழலை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

சென்னை ஒன்று” செயலி, பொதுமக்களுக்கு ஒரே QR குறியீடு மூலம் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் வசதியை அளிக்கிறது. இந்த செயலி மூலம் பயணிகள்: மெட்ரோ, புறநகர் ரெயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகள் உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகள் குறித்து நிகழ்நேர தகவலை அறிய முடியும்

UPI அல்லது டெபிட் / கிரெடிட் கார்ட் மூலமாக நேரடியாக பயணச் சீட்டுகளை வாங்க முடியும். ஒரு பயணத்திற்காக ஒரே கட்டணத்தில் பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைத்து பயணம் செய்ய முடியும்

இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விரிவான போக்குவரத்து திட்டத்தின் கீழ்: பயண நேரம் மற்றும் செலவை குறைக்கும் முயற்சிகள்

நம்பகமான மற்றும் விரைவான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்தல்

தனியார் வாகனங்களை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல்

சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் வகையில் குறைந்த கார்பன் உமிழ்வுகள்

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும் “சென்னை ஒன்று” செயலி, அரசின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இனி பயணச் சீட்டு பெறவேண்டி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. செயலியில் சில கிளிக்குகளில் பயணத் திட்டம் தயாரித்து, QR சீட்டுடன் நேரடியாக பயணிக்க முடியும்.