தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், ‘PhonePe’, ‘Gpay’ போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற ஆப்களை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இந்த வசதிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நியாயவிலைக் கடைகளில் மட்டுமே ரொக்கமாக பணம் செலுத்தும் முறை தொடர்ந்து இருந்து வருகிறது. இது சில நேரங்களில் சில்லரை பணம் பற்றாக்குறைக்கு காரணமாகி வருகிறது. இந்த சிக்கலை நீக்கும் வகையில் தமிழக அரசு “மொபைல் முத்தம்மா” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள், தங்களின் மொபைல் போன்களில் உள்ள UPI செயலிகள் மூலம் QR கோடு ஸ்கேன் செய்து நேரடியாக பணம் செலுத்தலாம். இந்த பணம் நேரடியாக அரசின் கணக்குக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தவிர்த்து, கணக்குகளை தெளிவாக பராமரிக்க உதவும் இந்த திட்டம், ஆரம்ப நிலையில் சென்னை நகரில் சில கடைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இது டிஜிட்டல் இந்தியா நோக்கத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.