பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு பெண் பயணி தனது செல்ல நாயை விமான நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளார். இந்த நாய் பிராகிசெபாலிக் இனத்தைச் சேர்ந்தது என்பதால், விமானப் பயணத்தில் கட்டுப்பாடுகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது திட்டங்களை மாற்றுவதற்குப் பதிலாக நாயை விட்டுவிட்டு, அதற்காக ஒரு டாக்ஸி முன்பதிவு செய்து விட்டு விமானத்தில் ஏறி சென்றுவிட்டார்.

இந்த சோகமான சம்பவம் சமூக வலைதளங்களில் விரைவில் பரவி கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. டாக்ஸி ஓட்டுநர் அந்த நாயை  எடுத்துச் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து, பிரசெல்ஸில் உள்ள Royal Society for the Protection of Animals  என்னும் அமைப்பு அந்த நாயை தற்காலிகமாக தத்தெடுத்து பராமரித்தது. பின்னர், அந்த நாயை பழக்கமான மற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SRPA அமைப்பு, இந்த சம்பவம் தொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “இந்த வகையான மீறல்கள் பெல்ஜியத்தில் ஏற்க முடியாதவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாயின் பாதுகாப்பை முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி பலரது கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.