நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். பள்ளியில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கல்வியை இடைநிறுத்தி, திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கச் சென்றதாக தெரிகிறது. அங்கு ஒரு தனியார் நூல்மில் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், அங்கு பணியாற்றிய திருச்சியைச் சேர்ந்த 21 வயது வாலிபருடன் பழகி வந்தார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.

இந்த நெருக்கமான உறவினால், சிறுமி 8 மாதம் கர்ப்பமாகியிருந்தார். சமீபத்தில், சிறுமி குன்னூருக்கு வந்தபோது, வயிறு வலியால் அவதிப்பட்டார். உடனடியாக, அவரது தந்தை அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதும், தற்போது பிரசவ வேதனை ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. உடனே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது.

இது தொடர்பாக அறிந்த குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சிறுமியின் வயதைக் கணக்கில் கொண்டு, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வாலிபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவம் திருப்பூரில் நடந்ததையடுத்து, வழக்கு திருப்பூர் போலீசாரிடம் மாற்றப்பட்டது.

மேலும் சிறுமியுடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் வாலிபர் தற்போது துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.