தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், திருச்சியில் நடைபெற்ற பரப்புரை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரியலூரில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களை நோக்கி உரையாற்றிய அவர், பாஜக மற்றும் திமுக அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

அரியலூருக்கு வந்த விஜய்க்கு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கூறியதாவது:  “மதுரை மாநாட்டில், உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க வருவதாக நான் தெரிவித்திருந்தேன். இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன். நாடு முழுவதும் பாசிச பாஜக அரசு மேலிலும், மாநிலத்தில் பாய்சன் திமுக அரசு கீழிலும் மோசமான ஆட்சி செய்து வருகின்றன. இருவரும் மக்களை நம்ப வைத்து துரோகம் செய்துள்ளன.

கடந்த தேர்தலில், நம்மை நாமே நம்பி, இவர்கள் நல்லது செய்வார்கள் என எண்ணி, 505 வாக்குறுதிகள் கொடுத்து வெற்றியடைந்தது திமுக. ஆனால், தற்போது அந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? இதற்குப் பதிலாக, அனைத்தையும் நிறைவேற்றியதாக திமுக அரசு கூறுவது மனசாட்சியற்ற செயல். ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என சொல்வீர்கள். ஆனால் இன்று நீங்கள் சொல்வது அனைத்தும் ரீல்ஸ் போலவே இருக்கிறது. அது கூட பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,” என்று விமர்சித்தார்.

மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிறைவேற்றி விட்டதாக மனசாட்சியே இல்லாமல் கதை விடுகிறீர்களே My Dr. CM Sir என்று கூறினார். அதே நேரத்தில் திருச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தின் போதும் மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு அதை சொல்லிக்காட்டி பெண்களை அசிங்கப்படுத்துவதாகவும் இலவச மகளிர் பயணம் என்று சொல்லிவிட்டு ஓசி பயணம் என்று பெண்களை அசிங்கப்படுத்துவதாகவும் திமுக அரசை விமர்சித்த அவர் பழைய ஓய்வூதிய திட்டம், கல்வி கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.