அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று மாலை சென்னை செல்ல கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது நிருபர்கள் அவரை சந்தித்து, “எங்கே செல்கிறீர்கள்?” என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், “சென்னையில் உள்ள உறவினர் திருமண விழாவுக்கு செல்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து, “அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி அறிவித்த 10 நாள் காலக்கெடுவில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்ற நிருபர் கேள்விக்கு, “எல்லாமே நன்மைக்கே” எனக் கூறி சிரித்தார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தங்களை சந்தித்து வருவது குறித்து கேள்வியெழுப்பிய நிருபர்களிடம், “எனது எண்ணம் எப்போதும் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. அனைவரும் ஒன்று சேர வேண்டும். அம்மா (ஜெயலலிதா)வின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என்பது என் முழு ஆசை. காலமே பதில் சொல்லும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இன்னும் ஒரு மாதத்தில் அதிமுகவில் இணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
மேலும் செங்கோட்டையன் இன்னும் ஒரு மாதத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் இணைவார்கள் என்று கூறியுள்ள நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இந்த கருத்தை சொன்னதற்காக செங்கோட்டையன் கட்சி பதவியை பறித்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் பிரிந்தவர்கள் இணைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
