வியட்நாமினில் உள்ள ‘பம்பாய் பைட்ஸ்’ என்ற இந்திய உணவகத்தில், இந்தியச் சுற்றுலாப் பயணி குடும்பம் ஒன்று ரகளையில் ஈடுபட்டு, உணவகப் பொருட்களைச் சேதப்படுத்தி, ஊழியரைத் தாக்கிய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளன.
உணவகத்தின் டூரிஸ்ட் பகுதியில் குழந்தைகள் டிஷ்யூ பேப்பர்களை வீசி விளையாடியதை ஊழியர்கள் கனிவோடு தட்டிக்கேட்டுள்ளனர்; இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடும்பத்தினர், தங்களை பெரிய ‘சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்’ என்று கூறிக்கொண்டு, மேஜை துணிகளை இழுத்து, அங்கிருந்த பொருட்களைத் தரையில் வீசி எறிந்து உடைத்ததுடன், தடுக்க வந்த ஊழியரை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளனர்.
தாங்கள் மறந்து வைத்துச் சென்ற பையைத் திரும்பக் கொடுத்த ஊழியரையும் அடிக்கப் பாய்ந்ததாக உணவகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள உணவக உரிமையாளர் ஐஸ்வர்யா கண்ணா சிங், “இன்ஃப்ளூயன்சர் என்ற அடையாளம் யாருக்கும் அடிப்படை ஒழுக்கத்தை மீறும் உரிமையைத் தந்துவிடாது” எனக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்களின் இத்தகைய அநாகரிக நடத்தை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.
