ஒரு காலத்தில் நம் வீட்டு முற்றத்தில் கீச் கீச் என்று சத்தமிட்டு விளையாடிய சிட்டுக்குருவிகள், இன்றைய கான்கிரீட் காடுகளிலும், மொபைல் டவர் கதிர்வீச்சுகளினாலும் பெரிய நகரங்களில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன. ஆனால், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு பழங்கால பங்களா இந்த கசப்பான உண்மைக்கு சவால் விடும் வகையில் குருவிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. நகரத்தில் குருவிகள் அழிந்து வருவதைக் கண்ட இந்த வீட்டின் உரிமையாளர், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். பறந்து திரியும் குருவிகளுக்கு எவ்வித காயமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முதலில் தனது வீட்டின் அனைத்து சீலிங் ஃபேன்களையும்  கழற்றி எறிந்தார். மேலும், ஏசி பயன்பாட்டையும் முற்றிலும் நிறுத்திவிட்டு, குருவிகள் பயமின்றி கூடு கட்டுவதற்காக வலை அமைக்கப்பட்ட கூலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anuj Ramatri – An EcoFreak (@anujramatri)

தற்போது இந்த பங்களா ஒரு நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படம் போல காட்சியளிக்கிறது. வீட்டின் ஜன்னல்கள் முதல் கூரையின் ஒவ்வொரு மூலை வரை குருவிகள் தங்குவதற்கென்றே பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. “இப்போது இந்த வீட்டில் வசிக்கும் எங்களை விட, பல்லாயிரக்கணக்கான குருவிகள் தான் இந்த வீட்டின் முதலாளிகள்” என்று நெகிழ்ச்சியோடு கூறுகின்றனர் அங்கு வாழும் குடும்பத்தினர். காலை மற்றும் மாலை வேளையில் ஆயிரக்கணக்கான குருவிகள் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தம், அந்தப் பகுதியையே ஒரு இசை கச்சேரி போல மாற்றுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “இதுதான் உண்மையான இயற்கை பாதுகாப்பு, நாமும் நம் வீடுகளை இப்படி மாற்ற வேண்டும்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இயற்கையைக் காக்க பெரிய அமைப்புகள் தேவையில்லை, ஒரு நல்ல எண்ணமும், நமது சிறிய வசதிகளைத் தியாகம் செய்யும் குணமும் இருந்தால் போதும் என்பதை இந்த மொராதாபாத் பங்களா நிரூபித்துள்ளது.