அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று (ஜூலை 1) நடக்கிறது. இப்போட்டியில் 15 வயதே ஆன இந்திய இளம் அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது. வைபவின் வருகை இந்திய அணியில் மட்டுமல்லாமல், இங்கிலாந்து அணியின் கூடாரத்திலும் தற்போதே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
போட்டிக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிடம் வைபவ் சூர்யவன்ஷி குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த புரூக், “வைபவ் சூர்யவன்ஷி அசாத்திய திறமை படைத்த ஒரு வீரர், இதுவரை அவர் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால், அவர் தனது சிறந்த ஆட்டத்தை எங்களுக்கு எதிராக வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இங்கிலாந்து அணி சில ‘ஸ்பெஷல் உத்திகளை’ வகுத்துள்ளது என்று கூறினார். மேலும், “உங்களுக்கு 15 வயதாக இருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று செய்தியாளர் சிரித்துக்கொண்டே கேட்டதற்கு, “நான் அப்போது யார்க்ஷயர் அணிக்காக அகாடமி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்” என்று புரூக் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
மறுபுறம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் 5 ரன்களும், இரண்டாவது போட்டியில் டக் அவுட்டும் ஆகி சொதப்பியதால் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்து அணி போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே தங்களின் அதிகாரப்பூர்வ ஆடும் லெவனை அறிவித்து இந்தியாவிற்கு சவால் விடுத்துள்ளது. இங்கிலாந்தின் இந்த சவாலை எதிர்கொள்ள இந்திய நிர்வாகம் வைபவை களமிறக்குமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
