விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாட்டை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் தனது பரப்புரைச் செயல்பாடுகளை மேற்கொண்டார். திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக நேற்று தொண்டர்களை சந்தித்த விஜய், அதன் பின்னர் அரியலூரில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: “உங்களுடைய அன்புக்காக, நான் எந்த உயரத்தையும், எந்த வசதியையும், எந்த வருமானத்தையும் விட்டுவிட்டு வரலாம். ஒரு சாதாரண மனிதனாக இருந்த எனக்கு நீங்கள் அளித்த அன்பே எனக்கு பெரிய விருது. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என நினைக்கும் மனநிலை எனக்கில்லை. எனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக உழைப்பதே என் வாழ்க்கையின் நோக்கம். மேலிலும் கீழிலும் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாஜக மற்றும் திமுக அரசுகளுக்கு எதிராக நியாயமான கேள்விகளை எழுப்பவே இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன்.”
“2029-ல் பாஜக ஆட்சி முடிவடையும். வட இந்தியாவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்க, ‘தொகுதி மறுவரையறை’ என்ற பெயரில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், 505 வாக்குறுதிகளை அளித்த திமுக அரசு, எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது? முழுமையாக நிறைவேற்றியதாகக் கூறுவது மனசாட்சியற்ற செயல். மக்கள் கேட்பதை தவிர, இவர்கள் பதிலளிக்கவே மாட்டார்கள். பாஜகவும், திமுகவும் ஏமாற்றுவதில் ஒரே வகையறை.”
“வறட்சி மாவட்டமாக அறியப்படும் அரியலூரில் சிமெண்ட், முந்திரி, பட்டாசுத் தொழில்கள் உள்ளன. ஆனால், அரசு எந்த தொழிலையும் மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. யுனெஸ்கோ மரபுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பராமரிப்பு அவசியம். ராஜராஜ சோழனுக்கு ஜெயங்கொண்டத்தில் மணிமண்டபம் ஏன் இல்லை? போக்குவரத்துத் துறை அமைச்சர் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும், போதிய பேருந்து வசதி இல்லாததற்குக் காரணம் என்ன?”
மேலும் “தீர்வை நோக்கிப் போவதே தவெகவின் நோக்கம். பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல், நடைமுறைக்கு சாத்தியமானவைகளை மட்டுமே நாங்கள் சொல்வோம். மருத்துவம், குடிநீர், கல்வி, சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கில் எந்த சமரசமும் இருக்காது. ஏழ்மை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கமற்ற நிர்வாகம், ஊழல் இல்லாத அரசு மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சியே நமது இலக்கு,” என்று தெரிவித்தார்.
