விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மத்தியில், இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய் பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர், தனது கனிவான சேவையால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை அவர் சக்கர நாற்காலியில் அமரவைத்து, இன்முகத்துடன் கவனித்து அழைத்துச் செல்லும் உணர்வுப்பூர்வமான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
View this post on Instagram
பேசும் வார்த்தைகளை விட, சக மனிதர்கள் மீது காட்டும் அன்பும் புன்னகையுமே மிகச் சிறந்த தகவல் தொடர்பு என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தருணம், பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. தன்னுடைய குறைபாடுகளை ஒரு பொருட்டாக எண்ணாமல், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளைத் துல்லியமாகவும் மிகுந்த அர்ப்பணிப்போடும் அவர் செய்து வருவது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
“அன்பிற்கு மொழிகள் தேவையில்லை” என்ற வாசகத்துடன் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் சமூகத்தில் பறைசாற்றுகிறது. கடினமானச் சூழலிலும் முகத்தில் புன்னகை மாறாமல் கடமையாற்றும் அந்த ஊழியரின் அசாத்தியமான உழைப்பிற்கும், அவருக்குப் பணியிடத்தில் சம வாய்ப்பளித்து ஊக்கப்படுத்திய இண்டிகோ நிறுவனத்திற்கும் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.
