வட கொரியாவில் வெளிநாட்டு உள்ளடக்கங்களை, குறிப்பாக தென் கொரியாவின் பிரபலமான K-Drama தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பகிர்ந்தாலோ, பார்த்தாலோ கூட மரண தண்டனை விதிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2014க்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டதோடு, தண்டனைகளும் மிகுந்த கொடூரமாகி விட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை பகிர்ந்ததற்கே ஏற்கனவே சிலர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

14 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, வட கொரியாவிலிருந்து தப்பி வந்த 300க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

“2015க்குப் பின் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாக மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகமான கண்காணிப்பும் கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட கொரியா உலகின் மிகவும் கட்டுப்பாட்டுக்குட்பட்ட நாடாக மாறிவிட்டது” என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய, வட கொரியாவுக்கான ஐ.நா. மனித உரிமை அலுவலகத் தலைவர் ஜேம்ஸ் ஹீனன், “கோவிட் தொற்றுக்குப் பிறகு, சாதாரண குற்றங்களுக்கும், அரசியல் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு டிவி தொடர்கள், குறிப்பாக தென் கொரிய தொடர்களை பகிர்ந்த சிலர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, 2014ல் வெளியான வரலாற்றுச் சான்றுகளுக்குப் பின், வட கொரியாவின் மனித உரிமை மீறல்களை மீண்டும் உலகளவில் தீவிரமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.