திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூரைச் சேர்ந்த துரைராஜின் மனைவி சுமதி (52), காந்தி மார்க்கெட் மயிலம் சந்தையில் உள்ள ஹார்டுவேர் கடையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.

மூன்று மாடிகள் கொண்ட அந்தக் கடையில், பொருட்களை மேல் தளங்களுக்கு கொண்டு செல்ல திறந்தவெளி லிப்ட் பயன்படுத்தப்பட்டு வந்தது. வழக்கம்போல நேற்று இரவு, சுமதி ஹார்டுவேர் பொருட்களை ஏற்றிக்கொண்டு லிப்ட்டில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீர் விபத்து ஏற்பட்டது. இதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லிப்ட்டில் செல்லும்போது சுமதியின் தலை பக்கவாட்டு தடுப்பில் மோதியதா? அல்லது சிக்கிக்கொண்டதா? என்பது உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, சுமதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.