உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 24 வயது இளைஞர் சஜல் ஜோஷி, தனது தந்தை முன்னிலையில் கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்பதற்கு முன், சஜல் 6.32 நிமிடங்கள் நீளமான யூடியூப் வீடியோவை பதிவேற்றியிருந்தார். அதில், தான் ஏன் இந்த முடிவை எடுக்கிறேன் என்பதை விளக்கியிருந்தார். கனடாவில் வசிக்கும் அவரது அண்ணன் அந்த வீடியோவைப் பார்த்து, உடனே தந்தைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், சஜல் அறையில் கத்தியுடன் இருந்தபோது, தந்தை தடுக்க முயன்றும் அவர் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

சஜல் தனது வீடியோவில், “அம்மா-அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இது உங்களுக்கு வலிக்கும், ஆனால் நான் தோல்வியடைந்து விட்டேன். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. நான் எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகும் குணமாகவில்லை. இந்த வலியை தாங்க முடியவில்லை,” என்று கூறியிருந்தார். அவர் நடிப்பு மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், நோய் காரணமாக அவரது கனவுகள் நிறைவேறவில்லை. முன்பு கல்வி மற்றும் தகவல் தொடர்பான வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிய சஜல், நோய் தீவிரமான பிறகு அதிலிருந்து விலகியிருந்தார்.

சஜல் தனது வீடியோவில், தனது பெற்றோர் தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றியதாகவும், எம்பிஏ படிக்க விரும்பியபோது ஆதரவு அளித்ததாகவும் கூறினார். மருத்துவ சிகிச்சைகளிலும் அவர்கள் தன்னை ஒருபோதும் கைவிடவில்லை என்று உருக்கமாக பேசினார். ஆனால், “இந்த நோயின் வலியை என்னால் தாங்க முடியவில்லை. இந்த வலி யாருக்கும் வரக்கூடாது. இந்த முடிவு என் சொந்த முடிவு,” என்று கூறி, தான் மனதளவில் இந்த நோயை எதிர்கொள்ளும் வலிமை இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.