டெல்லி தலைநகரில் பீர் குடிக்கும் சட்டப்பூர்வ வயதை 25-லிருந்து 21 ஆக குறைக்கலாம் என்று பரிந்துரை வந்துள்ளது. புதிய ஆல்கஹால் கொள்கையை தயாரிக்கும் உயர்மட்டக் குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் குழு, மதுபான உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று வருகிறது. இந்தப் புதிய கொள்கையின் மூலம், அரசு வருவாயை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது.
டெல்லியில் மதுபானம் வாங்குவதற்கு சட்டப்பூர்வ வயது 25 ஆக உள்ளது, இது மற்ற நகரங்களை விட அதிகம். குர்கான், நொய்டா, காஜியாபாத், பரிதாபாத் போன்ற தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள மற்ற நகரங்களில் இந்த வயது வரம்பு 21 ஆக உள்ளது. இந்த வயது வேறுபாடு காரணமாக, 25 வயதுக்கு குறைவான இளைஞர்கள் மதுபானம் வாங்குவதற்காக இந்த நகரங்களுக்கு செல்கின்றனர். இதனால், டெல்லி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, புதிய கொள்கையில் பீர் குடிக்கும் வயதை 21 ஆக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
புதிய ஆல்கஹால் கொள்கையில், மதுபானக் கடைகள் குடியிருப்பு பகுதிகள், கூட்டமான இடங்கள், பள்ளிகள், கோவில்கள் போன்ற இடங்களுக்கு அருகில் இருக்கக் கூடாது என்று உறுதி செய்யப்படும். மேலும், மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுபானக் கடைகளை அமைப்பதற்கு சில விதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கை மூலம், மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அரசின் வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும் டெல்லி அரசு முயற்சிக்கிறது.
