புதிய காரை வாங்கி முதலில் கோவிலுக்குச் சென்று பூஜை செய்யும் பழக்கம் இந்தியர்களிடையே பலருக்கும் உள்ளது. ஆனால் டெல்லியில் ஒருவர் காரை வாங்கிய அதே நாளில் கடுமையான விபத்தில் சிக்கி பரிதாபகரமான அனுபவத்தை எதிர்கொண்டார்.

நிர்மன் விஹார் பகுதியில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், மாணி பவார் என்ற பெண் தனது புதிய மஹிந்திரா தார் காரை முன்பதிவு செய்து வாங்க வந்திருந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், காரை பூஜை செய்து பெற்றுக்கொள்வதற்காக அவர் ஷோரூமிற்கு வந்தார். வழக்கம்போல, பூஜைகள் முடிந்ததும், காரின் நான்கு சக்கரங்களின் கீழும் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டது.

பின்னர், மாணி பவார் காரில் அமர்ந்தபோது, ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவரும் அருகில் இருந்தார். எலுமிச்சையை நசுக்கும் விதமாக லேசாக காரை இயக்கிய நிலையில், தவறுதலாக அவர் ஆக்ஸிலேட்டரை வலுவாக அழுத்திவிட்டார். இதன் விளைவாக, கார் வேகமாக முன்னேறி ஷோரூமின் முதல் மாடியில் இருந்த கண்ணாடி சுவரை உடைத்து கீழே விழுந்தது. கார், கண்ணாடி சுவருடன் பறந்து வீழ்ந்த அந்தக் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

விபத்தை கண்ட ஷோரூம் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து காரில் இருந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு, சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் தாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் “புதிய கார் வாங்கிய நாளே இப்படியா!” என்ற துயரக் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். சிலர், “எலுமிச்சை பழத்துக்கும் ஏதாவது கணக்கு இருக்கலாம் போல இருக்கே!” என நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளனர்.